3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல்: அதிரடி உத்தரவு..
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய மாறுதல் அளிக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களின் விவரங்களையும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை விடக் கூடுதல் பதிவுகள் EMIS தளத்தில் உள்ளதாகவும், பலரின் விவரங்கள் விடுபட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, PA to DEO போன்ற பதவிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக பதிவுகள் உள்ளதாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முதல் பள்ளி காவலர் வரை அரசால் அனுமதிக்கப்பட்ட முறையான பணியிடங்களில் பணியாற்றி வரும் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் அக். 1, 2026-க்குள் EMIS இணையதளத்தில் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆகியவை EMIS இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளதால், இதில் எந்தவிதத் தொய்வும் இன்றி விரைந்து செயல்படுமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

