இன்றுடன் அரையாண்டு தேர்வு நிறைவு.. எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் நாளை முதல் தொடங்க உள்ளன.
இந்த நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை, இந்த விடுமுறை நாட்களில் அவற்றை கற்றுக்கொள்ள பள்ளிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதை விடுத்து, மாணவர்களை கட்டாயப்படுத்திப் பாடங்கள் தொடர்பான சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்றும், இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் தங்களது அரையாண்டுத் தேர்வு விடுமுறையை குடும்பத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் மன அழுத்தம் இன்றி சிறப்பாக கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
