டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.. மாணவர்களுடன் உரையாடல்..
டெல்லியில் உள்ள Shri Ram College of Commerce கல்லூரியின் 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோவில் இருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நூறு ஆண்டுகளை கடந்த கல்வி நிறுவனம் என்பது அனுபவம், சாதனை மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறுகிறது என்றார். SRCC பல தலைமுறைகளை உருவாக்கி, அவர்களை பல்வேறு துறைகளில் சாதிக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் தற்போது பின்தங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், இந்திய ராணுவம் எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைதி அதிகரித்துள்ளதாகவும், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார்.
SRCC முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் தங்களது முத்திரையை பதித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்றும் மோடி நினைவுகூர்ந்தார்.
Edited by Siva

