பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கின் சீர்கேட்டை காரணம் காட்டி, நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலையை அமல்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானை விடுதலை செய்ய கோரியும், கடுமையான பொருளாதார சுமையை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் இந்த மாகாணத்தில் நீண்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பில் உள்ள பாதுகாப்பு தொடர்பான இரண்டு பிரிவுகளின் கீழ் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், மத்திய அரசுக்கு அந்த மாகாணத்தின் மீதான நிர்வாக அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிடிஐ கட்சி தலைமையிலான மாகாண அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையால் ஓரங்கட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மாகாண அரசின் மெத்தனப்போக்கே இந்த அவசரநிலைக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மக்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பிடிஐ தலைவர் கோஹர் அலி கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பெஷாவர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

