சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..
டெல்லியில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' ஆர்ப்பாட்டத்தின் போது செய்யப்பட்ட கைதுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று விடுமுறை நாளில் சிறப்பு விசாரணை மேற்கொண்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தப்போராட்டத்தின் போது எந்தவொரு சட்டவிரோதக் கைதுகளும் செய்யப்படக் கூடாது என்றும், அமைதியான முறையில் நடத்தும் போராட்டங்களை தடை செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசின் பதிலை கோரியுள்ள நீதிமன்றம், சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு மட்டுமே நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஜி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, சனிக்கிழமை நடந்த கைது நடவடிக்கைகள் மற்றும் மெட்ரோ ரயில், இணையசேவைத் தடைகள் குறித்த மனுக்களை விசாரித்தது.
வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் பிற நபர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை செய்வதை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தக் கூடாது என சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளை எழுப்பி CJP மற்றும் மாணவர் அமைப்புகள் விடுத்த போராட்ட அழைப்பை அடுத்து, டெல்லியில் பெருமளவிலான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

