10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தையடுத்து, அண்டை நாடான நேபாளத்துக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பீமேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ராசுவா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் 10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா நேபாள மக்களுடன் உறுதியாக நிற்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் பேசி, இந்தியா சார்பில் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சி-17, சி-130ஜே, சி-295 உள்ளிட்ட போக்குவரத்து விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயிருக்கலாம் என்ற தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட தகவலின்படி சுமார் 133 இந்தியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமும் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக சிறப்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Edited by Siva
