1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Nepal-Tibet Floods Kill at Least 165, Hundreds Missing as Rescue Operations Continue

அத்திப்பட்டி போல பல கிராமங்களை காணவில்லை.. நேபாளத்தில் வரலாறு காணாத இயற்கை பேரழிவு..

நேபாள வெள்ளம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை குறைந்தது 165 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமானவர்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் மட்டும் 162 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 403 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 142 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவின் திபெத் எல்லை பகுதியிலும் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 265 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ல்ஹெண்டே ஆற்றின் கரையில் இருந்து மண் மற்றும் குப்பைகள் பெருமளவில் சரிந்து ஆற்றுக்குள் விழுந்ததே இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
 
இதனால் போட்டே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பாதையில் இருந்த வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.
 
நேபாள ராணுவத்தினர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சேறு மற்றும் மண் நிறைந்த பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து உயிருடன் இருப்பவர்களை தேடி வருகின்றனர்.
 
இதற்கிடையே, ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருவண்ணாமலை கோவிலுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல முடியாது.. புதிய கட்டுப்பாடு...