ஆங்கிலம் தப்பாக பேசியதால் தாஜ் ஓட்டல் வெயிட்டரை அறைந்த வாடிக்கையாளர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்...
ஆக்ராவில் உள்ள பிரபல தாஜ் நட்சத்திர ஹோட்டலில், ஆங்கிலம் சரியாக பேச தெரியாத காரணத்தால் ஏற்பட்ட கம்யூனிகேஷன் இடைவெளியால் வெயிட்டரை அறைந்த வாடிக்கையாளரை ஹோட்டல் நிர்வாகம் ஆயுட்காலம் வரை நுழைவுத்தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தாஜ் ஆக்ரா ஹோட்டலின் மேலாண் இயக்குநர் பரிதோஷ் லதானி இது குறித்து தனது லிங்க்டுஇன் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். காந்தி என்ற அந்த ஊழியர், ஆக்ரா அருகிலுள்ள ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதே தனது கனவு என்பதால், வேலையை இழந்துவிடக் கூடாது என்ற பயத்தில் இந்த தாக்குதல் குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் கொதித்தெழுந்த பரிதோஷ் லதானி, அந்த வாடிக்கையாளரை தாஜ் ஹோட்டலுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்தார். "பணம் இருக்கிறது என்பதற்காக என் ஊழியரின் சுயமரியாதையை சீண்ட யாருக்கும் உரிமையில்லை. ஊழியர்கள் தங்களுக்காக பேச பயப்படும்போது, அவர்களுக்காக நின்று குரல் கொடுப்பது நிர்வாகத்தின் கடமை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஊழியரின் தன்மானத்தை பாதுகாத்த ஹோட்டல் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

