சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது சென்னை பரங்கிமலை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி தனது யூடியூப் பக்கத்தில் சாட்டை துரைமுருகன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் என அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சாட்டை துரைமுருகன் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நந்தகுமார், பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

