1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac-resto-bar-plan-minister-vignesh-denial

ரெஸ்டோ பார் திட்டம் : அமைச்சர் விக்னேஷ் மறுப்பு!

ரெஸ்டோ பார்  திட்டம்
தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்களான ரெஸ்டோ பார் அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளைப் போல தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய வரியுடன் கூடிய  ரெஸ்டோ பார்  எனப்படும் உணவக வசதியுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவின.  தற்போது இயங்கி வரும் சில கிளப்கள் (FL2, FL3 உரிமம் கொண்டவை) மூலம் அரசுக்குச் சரியான மதிப்பு கூட்டு வரி கிடைப்பதில்லை என்றும், இதனால் வரியுடன் கூடிய முறையான ரெஸ்டோ பார்களை விரிவுபடுத்தி அரசின் வருவாயை உயர்த்த டாஸ்மாக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் ஊடக வட்டாரங்களில் கூறப்பட்டது.    
 
இந்தத் தகவல்  நேற்று சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டம் குறித்து டாஸ்மாக் நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை  என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களில் வெளியானவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More