டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10. தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு
டாஸ்மாக் நிறுவனம் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை முறையாக செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மலைப்பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மது பாட்டில்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ. 10 சேர்த்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணத்தை செஸ் வரியாக விதிப்பது குறித்து வணிக வரித் துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் மறுசுழற்சி செய்யும் பொறுப்புகள் அந்தந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த பாட்டில்களை 'க்யூஆர்' குறியீடு தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளும்.
இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Edited by Siva
