திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜனவரி 2026 (23:13 IST)

ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்ணும் ராகுல்!.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா?...

rahul vijay
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இத்தனைக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு திமுக எந்த பங்கும் கொடுப்பதில்லை. அதாவது இதுவரை எந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்டதில்லை.

ஆனால் சமீப காலமாகவே காங்கிரசுக்கு திமுக ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரஸ் மத்தியில் வலுத்து வருகிறது. அதோடு, 2026 தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை காங்கிரஸுக்கு திமுக கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் காங்கிரஸ் பிரமுகர்களால் வைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த கருத்தை கூறியிருந்தார்கள். ஒரு படிக்கு மேலே சென்று சென்னை வந்த பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை தனிமையில் சந்தித்து பேசினார்.

விஜயை பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கிய போதே எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் பிரச்சினை இருப்பதை சுட்டிக்காட்டி விஜய்க்கு ஆதரவாக இன்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேரடியாக பிரதமர் மோடியை தாக்கி விமர்சனம் செய்திருக்கிறார்.காங்கிரஸ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.