1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

விஜய்யுடன் கூட்டணி இல்லை.. திமுகவுடன் கூட்டணி தொடரும்.. காங்கிரஸ் மேலிடம் முடிவு?

விஜய்யுடன் கூட்டணி இல்லை.. திமுகவுடன் கூட்டணி தொடரும்.. காங்கிரஸ் மேலிடம் முடிவு?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையலாம் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம், தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்க கிட்டத்தட்ட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி மற்றும் விஜய் இடையே நடந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி உடையுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர், திமுகவே தங்களின் "நம்பகமான கூட்டாளி" என்றும், தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 
இருப்பினும், இம்முறை திமுகவிடம் அதிகப்படியான தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. தவெக போன்ற புதிய கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதாக வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், அதை பயன்படுத்தி திமுகவிடம் கூடுதல் இடங்களை பெற காங்கிரஸ் பேரம் பேசக்கூடும் எனத் தெரிகிறது. 
 
எது எப்படியிருப்பினும், 2026 தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கரம் கோர்ப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 
 
Edited by Siva