திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேதியை அறிவித்த துரைமுருகன்!..
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கியிருக்கின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்.
அதிமுக ஏற்கனவே பாஜக மற்றும் அன்புமணி ராமதாஸ் பாமக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்திருக்கிறது. மேலும், சில கட்சிகள் அந்த கூட்டணில் இணையும் என சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒருபக்கம் விஜயின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப்போட்டியிடும் எனத்தெரிகிறது.
ஒருபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை பேச துவங்கிவிட்டது. ஒருவேளை திமுக அதை கொடுக்கவில்லை என்றால் விஜயின் தவெக பக்கம் காங்கிரஸ் போகவும் வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில்தான் தேர்தலை பற்றி விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் விரைவில் கூடவிருக்கிறது.
வருகிற 20ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் செய்தி வெளியிட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸின் கோரிக்கை, தேர்தல் தொடர்பான பணிகள் என முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் எனத்தெரிகிறது.