1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 ஜனவரி 2026 (19:22 IST)

உம்முன்னு இருக்குறது சினிமாவுக்கு ஓகே!.. அரசியலுக்கு செட் ஆகுமா விஜய்?!..

vijay
பொதுவாகவே நடிகர் விஜய் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.. யாரிடமும் அதிகம் பேச மாட்டார்.. எப்படிப்பட்ட கேள்விகளை கேட்டாலும் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் வரும். அவர் அதிகம் பேசுவது சினிமாவில் மட்டும்தான். சினிமாவில் நடிக்கும் போது கூட கேரவனில் இருப்பார்.. இறங்கி வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவனுக்கு போய்விடுவார். மிகவும் தனிமை விரும்பி.. அவரின் படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் கூட அவரின் இந்த குணத்தை பார்த்து கோபப்படுவார்கள்.

ஆங்கிலத்தில் Introvert என சொல்வார்கள்.. ஆம் விஜய் ஒரு Introvert.... தனிமை விரும்பி.. ஆனால் அப்படிப்பட்ட விஜய் அரசியலுக்கு வந்திருப்பதுதான் அவருக்கே பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கலாம்.. ஆனால் விஜய் அரசியலுக்கு செட் ஆவாரா? இல்லை அரசியல் விஜய்க்கு செட்டாகுமா? என்பதுதான் ஒன் மில்லியன் டாலர் கேள்வி.

விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.. மக்களிடம் அவருக்கு ஆதரவும் இருக்கிறது. கரூர் சம்பவத்தில் கூட அவருக்கு ஆதரவாக அந்த ஊர் மக்களே கருத்து சொன்னார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார் என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் ஒரு அரசியல்வாதியாக தன்னை அவர் தயார்படுத்திக் கொண்டாரா?.. தகுதிப்படுத்திக் கொண்டாரா? என்பதுதான் கேள்வி.

vijay

சினிமாவில் மற்ற நடிகர்களுக்கு பிரச்சினை வந்தபோது மட்டுமில்லை.. தனக்கு பிரச்சனை வந்தபோதும் விஜய் வாயை திறந்து பேசியதில்லை.. மௌனமாகவே இருப்பார்.. அவரின் தலைவா பட பிரச்சனையின் போது மட்டுமே ஒரு வீடியோ வெளியிட்டார்.. அதிலும் கூட சத்தம் இல்லாமல் கையைக் கட்டிக்கொண்டு மிகவும் பணிவாக பேசியிருப்பார்.. அதுதான் விஜயின் குணம்..

ஆனால் தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் மிகவும் ஆவேசமாக மேடைகளில் பேசுகிறார்.. அதேநேரம் மற்ற சமயங்களில் மிகவும் மௌனமாக இருக்கிறார்.. அரசியல் என்றால் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.. மக்களுக்காக போராட வேண்டும்.. மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும்.. எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்க வேண்டும்.. மக்களால் கவனிக்கப்படும் சர்ச்சையான எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னுடைய கருத்தை சொல்ல வேண்டும்..

மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி ஊடகங்களிடமும், செய்தியாளர்களிடமும் பேசவேண்டும். ஆளும்கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கவேண்டும்.. சீமான் மாதிரி.. ஆனால் விஜய் இதிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கிறார் என்பதே உண்மை. அவர் சினிமா நடிகராக இருந்தபோது இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால், தற்போது மக்கள் பணியாற்றும் அரசியலுக்கு வந்திருக்கிறார். எனவே, இந்த கேள்வி தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

vijay

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கும் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.. அதேபோல் அவரின் ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கியது தொடர்பாகவும் அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.. எனவே, ‘தன் படத்திற்கே குரல் கொடுக்காதவர் மக்கள் பிரச்சனைக்கு எப்படி குரல் கொடுப்பார்?’ என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் அரசியல்வாதியாக விஜய் இதை சரியாக பயன்படுத்தியிருக்கலாம்.

ஒரு திரைப்படத்தை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறதா?.. அரசியல்ரீதியாக எனக்கு அழுத்தம் கொடுக்கவே இப்படி செய்கிறார்கள்.. இதையெல்லாம் தாண்டி ஜனநாயகன் வெளியாகும்.. மக்கள் என் பக்கம் நிற்பார்கள்.. என்னை மிரட்டி பணிய வைக்க முடியாது என ஒரு அறிக்கையோ, வீடியோவோ வெளியிட்டிருந்தால் பத்திக் கொண்டிருக்கும்.. விஜய்க்கு அதிக அளவில் வாக்குகளும் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அது பெரிய மைனஸாக அமைந்திருக்கும். ஆனால் விஜய் அதை பயன்படுத்தவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜனநாயகன் விஷயத்தை காங்கிரஸும், திமுகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டதை கவனிக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ‘கடுப்பேத்தறவங்ககிட்ட கம்முன்னும், உசுப்பேத்திரவங்ககிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என்று அட்வைஸ் செய்தார். ஒரு தனி நபராக அல்லது சினிமா நடிகராக இதை அவர் ஃபாலோ செய்வதற் ஓகே. ஆனால், ஒரு அரசியல்வாதியாக உம்முன்னும், கம்முன்னும் இருந்தால் சரியாக வருமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.