இன்னும் eKYC பதிவு செய்யவில்லையா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ன் விதிகளின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க eKYC மற்றும் கைரேகை பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை 96.21 சதவிகிதம் மட்டுமே இந்த பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைரேகை சரிபார்ப்பை இன்னும் முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை eKYC அல்லது கைரேகை சரிபார்ப்பை முடிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குடும்பத்தில் யாருடைய கைரேகை சரிபார்ப்பும் நிலுவையில் இருந்தாலும், அவர்களும் முகாமில் பங்கேற்று தேவையான நடைமுறைகளை முடித்துக் கொள்வது முக்கியம்.
ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, கடைசி நேரம் வரை காத்திருக்காமல், குடும்ப உறுப்பினர்களுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று eKYC பணியை முடித்துக் கொள்வது நல்லது.
Edited by Siva
