டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை செய்த சோதனை.. மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுகிறது தமிழக அரசு...
டாஸ்மாக் தலைமையகத்தில் மத்திய அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற தமிழக அரசு தற்போது அதிரடியாக முடிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கையில் கட்சி நிதியை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த ஊழல் விசாரணை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறுவதை அரசு விரும்புவதாகவும், அதனாலேயே இந்த மேல்முறையீட்டை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும் மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டாஸ்மாக் தலைமையகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் தொடர் சோதனைகளை நடத்தினர். மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த பல்வேறு எஃப்.ஐ.ஆர் வழக்குகளின் அடிப்படையில் இந்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றது, மதுபான உற்பத்தி ஆலைகளிடமிருந்து சட்டவிரோதமாக பெருமளவில் கமிஷன் பெற்றது மற்றும் அதிகாரிகளின் பணியிட மாறுதல்களுக்கு லஞ்சம் வாங்கியது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இதில் முன்வைக்கப்பட்டன.
இந்த முறைகேடுகள் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் இந்த பணமோசடி விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையிலும், தற்போது அரசு தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற ஆவணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
Edited by Siva
