அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது அரசியல் எதிர்காலம் குறித்து தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருவது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர், தற்போது கட்சியில் நிலவும் சூழல் குறித்தும், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இது, அவர் விரைவில் அதிமுகவிலிருந்து வெளியேற தயாராகிவிட்டாரோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரங்களில் வலுப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் உட்கட்சி பூசல்களால் அதிருப்தியில் உள்ள தலைவர்கள் பலர், புதிய அரசியல் மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், விஜயபாஸ்கரும் தனது ஆதரவாளர்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க முயல்வது, அவர் தவெக அல்லது பிற அரசியல் சக்திகளுடன் இணையக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது. அவர் ஒருவேளை வெளியேறினால், அது அதிமுகவிற்கு மேலும் ஒரு பெரிய அரசியல் இழப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் பலமான கட்சியாக தவெக உருவெடுத்து வரும் நிலையில், விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்குமிக்க தலைவர்கள் கட்சி மாறினால், அது 2031 தேர்தல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஏற்கனவே பல விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் அதிமுக, விஜயபாஸ்கர் போன்ற சீனியர் தலைவரையும் இழக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது அடுத்தகட்ட நகர்வு, தமிழக அரசியலின் அதிகார சமன்பாட்டை மாற்றும் முக்கிய காரணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Edited by Siva
