1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Government School Students Secure MBBS and BDS Seats

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. 614 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்...

அரசு பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், 614 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், பொருளாதார மற்றும் சமூகச் சூழல் காரணமாக மருத்துவக் கனவு கைநழுவிப் போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இதன் தொடர்ச்சியாக, நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,806 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 614 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 510 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்களும், 104 பேர் பல் மருத்துவப் படிப்பு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
எம்பிபிஎஸ் படிப்பில் 323 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும், 166 பேர் சுயநிதி கல்லூரிகளிலும், 9 பேர் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் இடங்களைப் பெற்றுள்ளனர். அதேபோன்று பிடிஎஸ் படிப்பில் 16 பேர் அரசு கல்லூரிகளிலும், 88 பேர் சுயநிதி கல்லூரிகளிலும் இடங்களைப் பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு ஒதுக்கீடுகள் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சவுக்கு சங்கர் அலுவலகத்தை திறந்துவைத்த சிம்பு!.. வைரல் போட்டோஸ்!..