விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார்... திமுகவினர் ஒவ்வொரு நாளும் நடிக்கின்றனர்: அமைச்சர் மரிய வில்சன்
அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர்கள் தீவிரமான கருத்துகளைப் பேசி வருவது வழக்கம். அந்த வகையில், கட்சிக்கான நிதி திரட்டுவது மற்றும் பொதுவெளியில் அரசியல் நடத்தும் முறைகள் குறித்து எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் அமைச்சர் மரிய வில்சன்.
"கட்சிக்கான நிதி என்றால் என்னவென்றே தெரியாத பாசாங்குத்தனத்துடன் வெளியே வலம் வருகிறார்கள், ஆனால் உங்களுக்காகவே அதற்கேற்ற ஒன்றை நாங்கள் தனியாகத் தயாரித்து வருகிறோம், அது விரைவில் உங்களுக்கும் புரியும்" என்று அவர் கிண்டலாகக் கூறினார்.
மேலும், தங்களின் தலைவர் விஜய் மக்களின் நலனுக்காகத் தனது திரையுலக வாழ்க்கையையும் நடிப்பையும் முழுமையாகத் துறந்துவிட்டு முழு நேர அரசியலுக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "எங்கள் தலைவர் நடிப்பை விட்டுவிட்டு வந்துவிட்டார், ஆனால் நீங்கள்தான் பொதுவெளியில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நன்றாக நடிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலில் நாகரிகமும் மரியாதையும் மிகவும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சிலருக்கு அந்த அடிப்படை மரியாதையே தெரியவில்லை என்றும், அவர்களின் அரசியல் வளர்ப்பு அப்படிப்பட்டதுதான் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
