பிறப்பு, இறப்பை பதிவு செய்யவில்லை என்றால் இனி சிக்கல்.. அக்டோபர் 1 முதல் புதிய சட்டம் அமல்..
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்வதில் காலதாமதத்தை தவிர்க்கும் புதிய திருத்த சட்டம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பிறப்பு, இறப்பு பதிவுகளை உரிய காலத்தில் மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் 1969-ஆம் ஆண்டு சட்டத்தில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பிறப்பு அல்லது இறப்பு பதிவுகளில் இரண்டு ஆண்டுகள் வரை ஏற்படும் தாமதத்திற்கு முந்தைய நடைமுறையே தொடரும்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்கு மாற்றாக, முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 1969-ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தின் 13(3)-ஆவது பிரிவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற இந்த மசோதா தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது. இந்திய தலைமை பதிவாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் இந்த சட்ட அமலாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய விதிகளின்படி உரிய காலத்திற்குள் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Edited by Siva

