பாக்ஸ் ஆபீஸில் தனுஷின் கர: முதல் நாள் வசூல் சாதனை இதோ!
தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'கர'. 'போர் தொழில்' போன்ற ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தனுஷ் நடித்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பெரும் ஆர்வம் இருந்தது.
90-களில் ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் பின்னணியை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜூ, மூத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று முதல் நாளில் மட்டும் சுமார் 4,172 காட்சிகள் திரையிடப்பட்டன. இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ₹5.75 கோடி வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் ₹6.64 கோடி ஆகும்.
இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் மட்டும் முதல் நாளில் ₹2.25 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் மட்டும் உலக அளவில் ₹9.14 கோடி வசூலித்து தனுஷின் மார்க்கெட் வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், 'கர' படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்களும் படக்குழுவினரும் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தனுஷின் எதார்த்தமான நடிப்பும், விக்னேஷ் ராஜாவின் மேக்கிங்கும் பி ஸ்டேஷன் மற்றும் சி ஸ்டேஷன் ரசிகர்களைக் கவர்ந்தால், இந்தப் படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த வசூல் வேட்டையை நிகழ்த்த வாய்ப்புள்ளது.
