ஜேபி மோர்கன் சேஸ், பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு சிக்கல்.. பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் தவிப்பு...
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக, நேற்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை அணுக முடியாமலும், பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சமீபத்தில் அமெரிக்க விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 10,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வங்கி சேவைகளும் முடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேஸ் வங்கியின் உள் கட்டமைப்பு சர்வர்களில் ஏற்பட்ட மென்பொருள் பிழையே இந்த தற்காலிக முடக்கத்திற்கு காரணம் என்றும், இதற்கும் சைபர் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வங்கி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளது.
சேஸ் வங்கியில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப பிரச்சினையால், அதனுடன் இணைந்து பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பேங்க் ஆஃப் அமெரிக்கா , வெல்ஸ் பார்கோ , யுஎஸ் பேங்க் மற்றும் ஜெல்லே ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தாமதங்களைச் சந்தித்தனர்.
ஆன்லைன் வங்கிச்சேவைகள், ஏடிஎம் பயன்பாடு மற்றும் நிதிப் பரிமாற்றங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புகள், பின்னர் தொழில்நுட்ப குழுவினரால் சரிசெய்யப்பட்டு வங்கி சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. கடந்த வாரம் மைக்ரோசாப்ட் சேவைகளிலும் இதேபோன்ற தொழில்நுட்ப முடக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

