இந்த ஆண்டு குளிர்காலம் என்பதே கிடையாதா? பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும் என தகவல்...!
பசிபிக் பெருங்கடலில் கடல்நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எல் நினோ நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த எல் நினோ அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்க 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய எல் நினோ, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டவற்றை விட அதிக தீவிரம் கொண்டதாக மாறி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வரும் மாதங்களில் இதன் தாக்கம் மேலும் அதிகரித்து, 2026ஆம் ஆண்டின் இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும், தீவிரமான வெப்ப அலைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழைப்பொழிவு முறையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், மற்ற பகுதிகளில் கனமழை, புயல் மற்றும் வெள்ளமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் எல் நினோ தாக்கம் கவலை அளிக்கும் வகையில் இருக்கலாம். தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்து, மழைப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இதனால் பயிர்களுக்கான மழைப்பொழிவு குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம்.
பசிபிக் கடலின் ஆழமான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட பல டிகிரி உயர்ந்துள்ளதால், எல் நினோவின் தாக்கத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. இதன் விளைவாக உணவு உற்பத்தி, பணவீக்கம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Edited by Siva
