முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சங்கர், நாகராஜ் ஆகிய இரு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், பக்தர்களுக்கு கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், அங்கு வரும் பொதுமக்களிடம் கட்டாய பணம் வசூலித்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக முடி இறக்கும் பணியாளர்கள் சங்கர் மற்றும் நாகராஜ் ஆகியோர் மீது புகார்கள் எழுந்தன.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, புதிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின்படி, கோயில் நிர்வாகம் உடனடியாக இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது:
முறைகேட்டில் ஈடுபட்ட சங்கர், நாகராஜ் ஆகிய இருவரின் தொழில் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய புகார்கள் மீது போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இத்தகைய அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Siva
