திருப்பூரில் விஜய் ரோட் ஷோ ரத்து!.. வெயிலில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம்!..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார். மேலும், சில இடங்களில் அவர் ரோட் ஷோட் நடத்தவும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மற்றும் ரோட் ஷோ செய்ய திட்டமிட்டிருருந்தார்.
திருப்பூர் பெருமாநல்லூரில் பொதுமக்களுக்கு முன் அவர் பிரச்சாரம் செய்தபோது பல புதிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
நெசவாளர்களுக்கு அரசு சார்பில் 10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தப்படும். 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்..
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரப்படும். காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும். அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு சுழற்சிமுறை விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும். பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை மற்றும் நடமாடும் கழிப்பறை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட சில வாக்குறுதிகளை அளித்தார்.
மேலும் என்னை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன். மற்ற கட்சிகளை போல பொய் வாக்குறுதிகளை கொடுத்து நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என பேசினார். அதேநேரம், திருப்பூர் பெருமாநல்லூரிலிருந்து பூலுவப்பட்டி வரை நடக்கவிருந்த விஜயின் ரோட் ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பெருமாநல்லூரியில் பிரச்சாரத்தை முடிக்கும்போதே காலதாமதம் ஆனதால் ரத்து செய்துவிட்டார். இதையடுத்து பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.