1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2026 (14:38 IST)

ஜன நாயகனை பார்த்ததாக கூறிய விஜய் முன்னாள் மேலாளர்! கேள்வியால் துளைத்தெடுத்த பத்திரிகையாளர்கள்

ஜன நாயகனை  பார்த்ததாக கூறிய விஜய் முன்னாள் மேலாளர்! கேள்வியால் துளைத்தெடுத்த பத்திரிகையாளர்கள்
விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக, அவரது இறுதி படமாக உருவாகியுள்ள திரைப்படம்  ஜன நாயகன் . இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையன்றே திரைக்கு வரவிருந்த இப்படம், சென்சார் போர்டின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியாகாமல் தள்ளிப்போனது. இன்று வரை இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியவில்லை. 
 
படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ஜன நாயகன்' முழுப் படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் கசிந்ததற்கு  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மாபெரும் திருட்டுச் செயல் தொடர்பாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துத் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்தச் சூழல் ஒருபுறம் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்க, விஜய்யின் முன்னாள் மேலாளரான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது.  “நான் ஜன நாயகன் படத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். அந்தப் பிரின்ட்டில், தெளிவாக எடிட்டர் வெர்ஷன் ன்று எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்புகளைத் தாண்டி படம் வெளியில் வந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக இந்தப் படம் எடிட்டர் வெர்ஷன் மூலமாகப் படக்குழுவிடம் இருந்து தான் வெளிநபர்களுக்குக் கசிந்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
 
அவர் படக்குழுவினர் மீது பழிபோட்டாலும், திருட்டுப் பிரின்ட்டைப் பார்த்ததாகச் சாதாரணமாகக் கூறியது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாகக் குறுக்கிட்ட நிருபர்கள், ஜன நாயகன் திருட்டுப் பிரின்ட்டைப் பார்க்கக் கூடாது என்றும், மீறிப் பார்த்தாலோ அல்லது இணையத்தில் பகிர்ந்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் எனத் தயாரிப்பு நிறுவனமும் காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அப்படியிருக்க,  நீங்கள் எப்படி அந்தப் படத்தைப் பார்த்தீர்கள்? என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
 
இந்த எதிர்பாராத கேள்வியால் பி.டி.செல்வகுமார் திக்குமுக்காடிப் போனார். என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறிய அவர், உடனடியாகத் தனது பேச்சை அப்படியே மாற்றி,இல்லை... இல்லை... நான் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. என்னிடம் சிலர் சில காட்சிகளை மட்டுமே கொண்டு வந்து காட்டினார்கள்; அதைத்தான் நான் பார்த்தேன். தவிர, உலகம் முழுவதும் இன்று ஜன நாயகன் படத்தை எல்லாருமே பார்த்துவிட்டார்கள் என்று கூறி மழுப்பலாகப் பதில் அளித்துச் சமாளிக்க முயன்றார்.