1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Medium Students Get Priority in Government Jobs: Key Eligibility Rules Explained

1ஆம் வகுப்பு முதல் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்..

தமிழ் வழிக்கல்வி
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பாக முக்கியமான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 1ஆம் வகுப்பு முதல் அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான படிப்பை முழுமையாக தமிழ் வழியில் முடித்தவர்களே இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
 
ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை பயிற்று மொழியாக கொண்டு படித்துவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை சலுகையை பெற முடியாது. அதே நேரத்தில், வயது அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8ஆம் வகுப்புகளுக்குள் நேரடியாக பள்ளியில் சேர்ந்து, தமிழ் வழியில் தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தகுதி உள்ளது.
 
பிற மாநிலங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் சேர்ந்த வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்களும் இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள். ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் தனித்தேர்வராக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
 
மேலும், பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சில பாடங்களில் தோல்வியடைந்து, பின்னர் தனித்தேர்வராக அந்த பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களும் முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகையை பெற விரும்புவோர், அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரு பொருளை தயாரிக்கும் அறிவு இருந்தால் மட்டும் போதாது.. வெற்றி பெற இன்னொன்றும் முக்கியம்: ஸ்ரீதர் வேம்பு