தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் அண்டை மாநில முதல்வர்.. என்ன காரணம்?
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டின் 31-வது நிகழ்வு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கும் நிலையில், மாநாட்டை நடத்தும் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா சார்பில் துணை முதல்வர் மல்லுபாட்டி விக்ரமார்கா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த மாநாட்டிற்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி சார்பில் ஆளுநர் கைலாஷ்நாதன் உரை நிகழ்த்த உள்ளதால் முதல்வர் ரங்கசாமி மாநாட்டைப் புறக்கணித்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும், இதற்கான தெளிவான அதிகாரப்பூர்வ காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Edited by Siva
