1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 12 மார்ச் 2026 (16:02 IST)

கவர்னர் மாளிகைக்குள் நுழைந்து விருந்தினர் அறையில் படுத்து தூங்கிய ஜார்கண்ட் இளைஞர்.. பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியமா?

கவர்னர் மாளிகைக்குள் நுழைந்து விருந்தினர் அறையில் படுத்து தூங்கிய ஜார்கண்ட் இளைஞர்.. பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியமா?
புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த அதிர வைக்கும் பாதுகாப்பு விதிமீறல் காரணமாக, ஆயுதப்படை காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பலத்த பாதுகாப்பையும் மீறி ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து, அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் சென்று தாராளமாக படுத்து உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் ஒரு அந்நிய நபர் இவ்வளவு எளிதாக நுழைந்தது, பாதுகாப்பு பணியில் இருந்தவர்களின் மெத்தன போக்கைக் காட்டுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நுழைவாயிலில் பாதுகாப்பில் இருந்த ஆயுதப்படை காவலர் வசந்தராஜா தனது பணியில் கவனக்குறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை காவல்துறை அவரை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
 
மேலும், இந்தச் சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த தலைமைக் காவலர் ஆனந்தவேல் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்திலேயே இத்தகைய பாதுகாப்பு ஓட்டை விழுந்தது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva