1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why rahul vijay meeting not happened

தவெக மீது அதிருப்தில் காங்கிரஸ்?!.. விஜயை ராகுல் சந்திக்காமல் போனதன் பின்னணி!..

rahul vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. அதில் காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது.

இதனையடுத்து திமுகவுடன் காங்கிரஸுக்கு இருந்த பல வருட கூட்டணி முடிவுக்கு வந்தது. விஜய் முதல்வராக பதவியேற்றபோது ராகுல்காந்தியும் கலந்துகொண்டார். இந்நிலையில்தான், நேற்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் நரேந்திர மோடியை சந்தித்தார். இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஏனோ அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலையே தமிழகத்திற்கு திரும்பினார் முதல்வர் விஜய்..

விஜயை ராகுல் காந்தி சந்திக்காமல் போனதற்கு பல காரணங்களும் சொல்லப்பட்டது. இதுபற்றிய செய்தியாளர்களிடம் விளக்கமளித்த காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் ‘இன்று கர்நாடகாவில் சித்தராமையா ராஜினாமா செய்தது மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் ஆகியவற்றில் காங்கிரஸ் தலைவர் பிசியாக இருப்பதால் விஜயை சந்திக்கவில்லை. கண்டிப்பாக வருகிற ஜூன் 11ம் தேதி விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு நடைபெறும் எனவும் கூறினார்..

இந்நிலையில்தான் ராகுல் காந்தி  - விஜய் சந்திப்பு நடக்காமல் போனதற்கு பின்னணியில் வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தவெகவுக்கு தற்போது ஆட்சியை நடத்த போதுமான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இருக்கிறது. ஆனாலும் அதிமுகவை உடைத்து அதிலிருந்து நான்கு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தவெகவில் இணைத்திருப்பதை காங்கிரஸ் மேலிடம் ரசிக்கவில்லை என்கிறார்கள்.. அதோடு, பாஜக கூட்டணியில் இருந்தது அதிமுக.

மேலும், தவெக ஆட்சி நீடிக்க காங்கிரஸின் கூட்டணி தேவை என்கிற வகையில்தான் அந்த கட்சிக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் மற்ற கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைத்து இடைத்தேர்தலில் அவர்களை விசில் சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்து தவெக தனது பலத்தை கூட்டிக் கொண்டால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படாமல் போய்விடும். இதனால் தங்களது மதிப்பு குறைந்துவிடும் எனவும் ராகுல் நினைக்கிறாராம். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால்தான் டெல்லியில் ராகுல் - விஜய் சந்திப்பு நடைபெறவில்லை என சிலர் கூறுகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...