புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜனவரி 2026 (18:32 IST)

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

eps ttv
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. எதிரிகளின் இல்லை என்று சொல்வார்கள்.. எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் விஷயத்தில் இது உண்மையாக மாறியிருக்கிறது.
டிடிவி தினகரன், சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவர்களையே கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதன்பின் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரின் கைக்குள் கட்சி செல்லாதபடியும்,  கட்சிக்குள் அவர்கள் வராதபடியும் கவனமாக பார்த்துக் கொண்டார் பழனிச்சாமி. அதோடு, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தன்னை நியமித்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி.. எங்களால் முதல்வர் ஆனவர்.. இப்போது எங்களையே மதிப்பதில்லை.. அம்மாவின் ஆத்மா கூட அவரை மன்னிக்காது என்றெல்லாம் பழனிச்சாமியை வசைபாடி வந்தார் டிடிவி தினகரன்.. அதோடு அமமுக என்கிற தனிக்கட்சியும் துவங்கி அரசியல் செய்து வந்தார்.

அது மட்டுமல்ல.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் கூட்டணியில் நான் ஒருபோதும் இணைய மாட்டேன் என்றும் சில மாதங்கள் முன்பு சொன்னார். ஆனால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருக்கிறார்.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியின் தலைவர் எடப்படி பழனிச்சாமிதான். அதாவது கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை டிடிவி தினகரன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதற்குக் காரணம் பியூஸ் கோயல் சென்னை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசி அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார். இதையடுத்து ‘எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான்’ என சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்தார் டிடிவி தினகரன்.அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தவுடன் அவரை வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் பழனிச்சாமி .உடனே அதற்கு நன்றி தெரிவித்தார் டிடிவி தினகரன்.
eps ttv

எடப்பாடி பழனிச்சாமிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் பாசம் மக்களிடமும், அதிமுக கட்சியினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் எடப்பாடி பழனிச்சாமி -  டிடிவி தினகரன் சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.