திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எந்த கட்சியுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம் அரசியல் களமும் சூடு பிடித்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது. இதுவரை வேற எந்த கட்சியும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனியாகவே தேர்தலை சந்திக்கவுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் திமுக அல்லது அதிமுக பக்கம் போக வாய்ப்பிருக்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமே இல்லை கூட்டணி அமைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒருபக்கம் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திமுகவுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவுடன் பேசி வருவதாக தெரிகிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் விஜய் பக்கம் சென்று விடக்கூடாது என திமுக கருதுகிறது. எனவே இருவரிடமும் திமுக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. தனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தால் திமுகவுக்கு வருகிறேன் என ஓபிஎஸ் கண்டிஷன் போட்டதாக தெரிகிறது. ஆனால் அப்படி ஒரு பதவி திமுகவில் இல்லை.
ஒருவேளை பன்னீருக்காக அப்படி ஒரு பதவியை உருவாக்கி கொடுத்தால் பன்னீரும், அவரின் ஆதரவாளர்கள் சிலரும் திமுகவில் இணைய வாய்ப்புண்டு. தனக்கு மட்டும் பதவி என்றில்லாமல் தன்னுடைய ஆதரவாளர்கள் 10 பேருக்கும் தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் கேட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை இதற்கெல்லாம் திமுக தலைமை ஒப்புக் கொண்டால் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் இணைய வாய்ப்புண்டு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.