1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay comment about dmk corruption

பெரியார் பேர வச்சி ஊழல்!.. திமுக இனி தலை நிமிராது - விஜய் அட்டாக்...

vijay stalin
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் போலியான பல ஆயிரம் புத்தகங்களை அங்கே திமுக ஆட்சியில் வைத்திருக்கிறார்கள் என எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியதையடுத்து இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 300 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நூலத்தில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பதை தவெக அரசு தோண்ட துவங்கியிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.

இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று.

ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.

பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி’ என அவர் பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சியை கலைக்க முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்!. அதிமுக மதுரை பிரமுகர் மன்னன் கைது..