இனிமேல் அனுமதி வாங்க தலைமைக்கு போக வேண்டாம்.. உதவி செயற்பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரை அதிகாரம் பகிர்வு..
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோயில்களில், பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு மதிப்பீடு ஒப்புதல் வழங்குவதில் நீண்ட நாட்களாக பெரும் காலதாமதம் நிலவி வந்தது. இதை கருத்தில் கொண்ட முதலமைச்சர் விஜய், இப்பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் பணிகளை துரிதப்படுத்த பொறியாளர்களுக்கு புதிய அதிகாரங்களை பகிர்ந்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், இனி உதவி செயற்பொறியாளர்கள் 25 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கும், செயற்பொறியாளர்கள் 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கும், கண்காணிப்பு பொறியாளர்கள் 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கும் மதிப்பீடு ஒப்புதல் வழங்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு தலைமை பொறியாளர்கள் ஒப்புதல் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அதிகார பகிர்வு முறையால், கோப்புகள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு தேங்கிக் கிடக்கும் நிலை மாறி, கோயில் திருப்பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அந்தந்த நிலையிலேயே உடனுக்குடன் துவங்கப்படும்.
கோயில்களின் உள்கட்டமைப்பு மற்றும் குளங்களை சீரமைக்கும் பணிகளில் நிலவிய தொய்வை நீக்கி, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக ரீதியான இந்த அதிரடி மாற்றம், கோயில்களின் பாரம்பரியம் சிதையாமல் அதே சமயம் நவீன வசதிகளுடன் கூடிய பராமரிப்பை உறுதி செய்ய அடித்தளமிட்டுள்ளது.
Edited by Siva
