வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... விரைவில் புயலாக மாறுமா?
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுப்பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகத் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுப்பெற்று, நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக உருவாகும் பட்சத்தில், அதற்கு ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள 'அக்வான்' என்ற பெயர் சூட்டப்படும். இது நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் மூன்றாவது புயலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

