பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை மாற்றியமைக்க வேண்டும்ள் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதில் பயனர்களுக்கு ஒரே வகையான கருத்துகள் அல்லது வரையறுக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் வெளிப்படுவதைத் தவிர்க்க, பரிந்துரை மற்றும் தரவரிசை முறைகளில் முழுமையான உள்ளடக்க மாற்றத்தை மேற்கொள்ளுமாறு மெட்டாவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுநிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளடக்கங்களுக்கு தகுந்த சூழல், நம்பகத்தன்மை மற்றும் தேதியை குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வன்முறையைத் தூண்டும் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் தவறான அல்லது சூழலுக்கு பொருந்தாத தகவல்கள் பரவுவதைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கு அமைப்புகளுடன் உரிய ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய தடையற்ற நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்ச்சியான தணிக்கை உத்தரவு போன்று உள்ளதாக இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிறுவனர் அபர் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

