அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கூடுதல் கட்டணமா? புதிய நிபந்தனைகளும் அறிவிப்பு..!
அக்டோபர் 1, முதல் அதாவது நாளை முதல் இந்தியாவில் வாட்ஸ்அப் பிசினஸ் தளம் பயன்பாட்டிற்கான கட்டண முறையை மெட்டா நிறுவனம் மாற்றியமைக்கிறது. இதனால், இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த சில சேவைகளுக்கு இனி நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுவரை வாடிக்கையாளர் செய்தி அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் அனுப்பப்படும் ஆர்டர் உறுதிப்படுத்தல் மற்றும் டெலிவரி தகவல்கள் இலவசமாக இருந்தன. ஆனால், அக்டோபர் 1 முதல் இந்த 'பயன்பாட்டுச் செய்திகளுக்கு' ஜி.எஸ்.டி தவிர்த்து ஒரு செய்திக்கு ₹0.115 கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதேவேளையில், வழக்கமான வாடிக்கையாளர் கேள்விகளுக்கான பதில்களுக்கு ஒவ்வொரு பிசினஸ் எண்ணுக்கும் மாதம் முதல் 1,000 செய்திகள் இலவசமாக வழங்கப்படும். அதற்கு மேலதிகமாக அனுப்பப்படும் செய்திகளுக்குக் கட்டணம் பிடிபடும். விளம்பர செய்திகளுக்கு ஒரு செய்திக்கு ₹0.8631 மற்றும் ஒடிபி செய்திகளுக்கு ₹0.115 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 72 மணி நேரத்திற்கு இலவசமாக செய்தி அனுப்பும் வசதி தொடர்ந்து நீடிக்கும். இந்த மாற்றம் சாதாரண வாட்ஸ்அப் பயனர்களுக்கோ அல்லது சிறிய பிசினஸ் செயலியை பயன்படுத்துபவர்களுக்கோ பொருந்தாது. வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

