கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமே பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், பல தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன் - லைன் முறையில் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன
கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன் - லைனில் வகுப்புகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமே பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், பல தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன் - லைன் முறையில் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக சிலர் வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 20ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், குழந்தைகளுக்கு ஆன் - லைன் மூலம் கல்வி கற்பிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது. குழந்தைகளின் நலனை மனதில் வைத்து அந்த நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டிருந்த வழிமுறைகளையும் பரிசீலித்து, தமிழ்நாட்டில் ஆன் - லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில அரசு ஒளிபரப்பிவரும் கல்வி தொலைக்காட்சியில் வீட்டுப்பள்ளி என்ற திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள் குறிப்பிட்ட கால அட்டவணையில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகின்றன. 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட மடிக்கணினிகளில் பாடங்கள் வீடியோ வடிவில் ஜூலை 14ஆம் தேதி முதல் தரவிறக்கித்தரப்படுகின்றன.
இந்த நிலையில், பல தனியார் பள்ளிக்கூடங்கள் ஆன் -லைன் வகுப்புகளை நடத்தத் துவங்கியிருப்பதால் தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
1. கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக மாணவர்கள் பல்வேறு வகைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கக்கூடும். அதனை மனதில் கொண்டு மாணவர்களை ஆசிரியர்கள் அணுக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
2. மாணவர்களுக்கு இணைய இணைப்புடன் கூடிய கருவிகளை அளிக்கும்போது அதில் உள்ள தேடுபொறிகள், விரும்பத்தகாத விஷயங்களைக் காட்டாத வகையில் மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அல்லது நல்ல பழக்கங்களையுடைய, அக்கறையுள்ள பெரியவர்கள் யாராவது உடன் இருக்க வேண்டும்.
3. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்கள், ஆசிரியர்களின் இணையப் பாதுகாப்பிற்கென ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இதற்குப் பிறகு ஆன் - லைன் வகுப்புகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
4. ஆசிரியர்களுடன் மாணவர்கள் தொடர்புகொள்ள ஒவ்வொரு வகுப்பிற்கும் என உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பும் குழுக்களை உருவாக்கிக்கொள்ளலாம். சிறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் அந்தக் குழுக்களில் பங்கேற்கலாம்.
5. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகக் கடுமையாக இருக்கும்வகையில் இந்தப் பாடத்திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் பாடங்களை நடத்தக்கூடாது. மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
6. குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் கருவிகளைப் பார்ப்பது அவர்களது உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதால் மாணவர்களின் நலனை மனதில்கொண்டு, பாடத் திட்டங்களையும் நேரத்தையும் வடிவமைக்க வேண்டும்.
7. அடுத்த வாரம் என்ன பாடங்கள் இருக்கலாம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கலாம். தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களுடனும் பெற்றோருடனும் தொடர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும்.
8. ஒரு பெற்றோரால், டிஜிட்டல் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாத சூழல் இருந்தால் பிற மாணவர்களுடனோ, அக்கம்பக்கத்தினருடனோ சேர்ந்து கல்வி கற்க உரிய சூழலை உருவாக்கலாம். போதிய வசதியில்லாத மாணவர்களுக்கு முடிந்த வரை அவற்றைப் பெற்றுத்தர பள்ளிக்கூடங்கள் முயல வேண்டும்.
9. மாணவர்களின் புகைப்படங்களையோ, குறுஞ்செய்திகளையோ, வீடியோக்களையோ சமூகவலைதளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில் 10 - 15 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.
10. பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், முதல் தலைமுறையினர், சிறப்புத் தேவை உள்ளவர்கள் பாடங்கள் கற்பதை உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகளின் ஆன் - லைன் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
11. டிவி, லேப்டாப் கம்யூட்டர்கள் போன்றவை வீட்டில் எல்லோரும் பார்க்கும் வகையிலான இடங்களில் இருக்க வேண்டும்.
12. வருகைப் பதிவைப் பொறுத்தவரை மாணவர்கள் என்ன காரணத்தால் வராமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக செய்யலாமே தவிர, அதன் அடிப்படையில் தண்டிக்கக்கூடாது.
13. மதிப்பீட்டு முறைகளில் இந்த வருகைப்பதிவு கணக்கில்கொள்ளப்பட மாட்டாது. எந்தக் குழந்தையையும் ஆன் - லைன் வகுப்பிற்கு வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது.
14. ஒவ்வொரு ஆன் - லைன் வகுப்பும் 30 -45 நிமிடங்களுக்கு இருக்கலாம். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு வகுப்புகளை எடுக்கலாம். வகுப்புகள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணியோடு முடிந்துவிட வேண்டும்.
15. எல்கேஜி, யுகேஜி போன்ற வகுப்புகளுக்கு ஆன் லைன் வகுப்புகள் கூடாது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகளுக்கு மேல் இருக்கக்கூடாது. 9-12ஆம் வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு வகுப்புகளுக்கு மேல் கூடாது.