நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தானாகவே முன்வந்து பதவியை துறக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி சுவாமிநாதன் ஒருதலை சார்புடனும், அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பாகவும், குறிப்பிட்ட வழக்கறிஞர் மற்றும் சாதியினருக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தமில்லாத தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்றும், இவருக்கு பின்னால் ஒரு சதி கும்பல் இருப்பதாக தாம் கருதுவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எனவே, விசாரணை தடையின்றி நடப்பதற்கு வசதியாக நீதிபதி சுவாமிநாதன் தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்க கூடாது என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Edited by Siva