செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (08:58 IST)

நரேந்திர மோதி சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகல்; பதிவுகள் நீக்கம்

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து: நரேந்திர மோதி சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகல்; பதிவுகள் நீக்கம்
சீனாவின் முன்னணி சமூக ஊடகமான வெய்போவிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விலகியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிக் டாக், வீ சேட் , ஹெலோ உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 59 செல்பேசி செயலிகளுக்கு திங்கள்கிழமை, இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெய்போவில் 115 முறை பதிவிட்டுள்ளார். அவற்றில் 113 பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நரேந்திர மோதி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கொண்ட இரு பதிவுகள் மட்டும் நீக்கப்படாமல் உள்ளன என்று தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நரேந்திர மோதியின் கணக்கில் இருந்த அவரது புகைப்படமும் நீக்கப்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங்கின் புகைப்படம் உள்ள பதிவுகளை வெய்போ சமூக ஊடகத்தில் இருந்து நீக்குவது சிக்கலான காரியம் என்பதால் அவருடன் நரேந்திர மோதி எடுத்துக்கொண்ட படங்கள் நீக்கப்படவில்லை என்று தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

நரேந்திர மோதியின் வெய்போ கணக்கு 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தக் கணக்கின் மூலம் சுமார் 2.44 லட்சம் பேர் நரேந்திர மோதியை பின்தொடர்ந்தனர்.

வாட்ஸ்அப் செயலி, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் இணைதளங்களுக்கு சீனாவில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.