செவ்வாய், 5 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:37 IST)

ஈ.பி.எஸ் vs ஓ.பி.எஸ்: அதிமுகவை வெல்வதற்கான இருக்கும் 4 சவால்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்பிடம் தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக .பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல் முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 
ஒருபுறம் அதிமுக அலுவலக சாவியை சட்டப் போராட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வென்றிருக்கிறது. ஆனால், கட்சி யார் தரப்புக்கு என்பதை சட்ட ரீதியாகத் தீர்த்துக் கொள்வதற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கான சவால் நீதிமன்றத்தில் மட்டுமே இல்லை.

அதிமுகவையும், அதிமுக செல்வாக்கு செலுத்திய அரசியல் வெளியையும் மீண்டும் வெல்வதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான 4 சவால்கள் உள்ளன. அவற்றை இங்கே ஆராய்வோம்.

1. சட்டப் போராட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்பிடம் தரவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது எடப்பாடி தரப்புக்கு உளவியல் வலுவைத் தந்திருக்கலாம். ஆனால், இந்தத் தீர்ப்பு எடப்பாடி - ஓபிஎஸ் தரப்புகளுக்கு இடையிலான எந்த சட்டப் பிரச்னையையும் இறுதியாகத் தீர்த்துவைக்கவில்லை.

 

ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்துக்கு அரசாங்கம் சீல் வைப்பது தவறு என்ற கோணத்துக்கே அதிக முக்கியத்துவம் தந்தது உச்ச நீதிமன்றம். சாவியை அதிமுகவிடம் திருப்பித் தரவேண்டும் என்ற அம்சத்துக்கு முக்கியத்துவம் அளித்தே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக-வில் எந்த அணியிடம் சாவியைத் தரவேண்டும் என்ற கோணத்தில் ஆழமாக செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தங்கள் வசமே அலுவலகம் வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கருதினால், அதற்கு தனியாக உரிமையியல் வழக்குத் தொடர்ந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

எனவே, கட்சி அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் இறுதியாக முடித்து வைக்கவில்லை என்கிறார் பெயர் வெளியிடவிரும்பாத சட்டத் துறை செய்தியாளர் ஒருவர். அப்படி ஓ.பி.எஸ். தரப்பு உரிமையியல் வழக்குத் தொடர்ந்தால் அதில் இந்த தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

2. இரட்டை இலை சின்னத்துக்கான போராட்டம்

 

தம்மை கட்சியை விட்டு நீக்கிய ஜூலை 11 பொதுக்குழு அதிகாரபூர்வமற்றது என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். யார் உண்மையான அதிமுக என்ற கேள்வியாக இது தேர்தல் ஆணையத்தில் உருவெடுக்குமானால், கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமான அளவு கோலாகும்.

இந்தக் கேள்விகளைக் கடந்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தமக்கு உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கும். அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் உணர்வுபூர்வமாகவும், தேர்தல் கணக்குரீதியாகவும் மிகவும் வலுவான செல்வாக்கு செலுத்தக்கூடியது.

3. கட்சிக்குள் நடத்தவேண்டிய அரசியல் போராட்டம்

சட்டப் போராட்டத்திலும் வென்று, இரட்டை இலையையும் தன் பக்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துகொண்டாலும், அவருக்கான சவால் அத்துடன் முடியாது. "சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், தொண்டர்களை சந்திக்கும்போதுதான் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். இதுவரை தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் அதிமுக விவகாரங்களை அணுக்கமாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்.

அப்படித் தொண்டர்களிடம் செல்லும்போது ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்னை வரலாம் என்று கூறும் லட்சுமணன், எடப்பாடி பழனிசாமி தான் ஒரு தலைவர் இல்லை என்பதாகவே இதுவரை நிரூபித்துள்ளார் என்றும் கூறுகிறார். அத்துடன், விரட்டிவிட்டு, தட்டிப்பறித்து தமிழ்நாட்டின் எந்த கட்சியின் தலைமைக்கும் யாரும் வந்ததில்லை. இதை தொண்டர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார் அவர். எம்.ஜி.ஆர். ரசிகர்களாகவும் இருக்கிற அதிமுக தொண்டர்களின் மனங்களை எடப்பாடி வெல்லவில்லை என்பதே லட்சுமணன் கருத்து.

 

தங்கள் விருப்பம்போல பேசிவிடும் சி.வி.சண்முகம் போன்றவர்களைக் கட்டுப்படுத்துவதும், போகிற போக்கில் அவர்கள் ஏற்படுத்தும் சேதாரங்களை சமாளிப்பதும் எடப்பாடிக்கு கட்சிக்குள் சவாலாக இருக்கும் என்பதையும், தென் தமிழ்நாட்டில் அதிமுகவினர் எடப்பாடியை தலைவராக ஏற்றுக் கொள்வது சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அரசியல் நகர்வுகளை கவனித்துவரும் மூத்த செய்தியாளர் ஜெ.ஷண்முகசுந்தரம்.

4. வாக்காளர்களை வெல்வதற்கான போராட்டம்

கட்சியை வெல்வது, வாக்குகளை வெல்வதற்கான ஒரு முக்கியமான வழி என்றாலும்கூட மக்கள் ஏற்றுக்கொள்கிற தலைவராக உருவாவதன் முக்கியத்துவத்தையும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எடப்பாடி முதல்வர் பதவிக்கு வந்த பிறகு அதிமுக இதுவரை எந்த தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களை வென்றதே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் லட்சுமணன். எடப்பாடி முதல்வராக இருக்கும்போது நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 9 இடங்களை மட்டுமே அதிமுக வென்றது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலிலும் தோற்றது. நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோற்றது. சட்டமன்றத் தேர்தலில் தோற்றது. அந்த தேர்தலில் பெற்ற கணிசமான எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலோர் பெரும் கோடீஸ்வரர்கள். அவர்கள் பணம் செலவழித்து தங்கள் சொந்த முயற்சியால் வென்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் லட்சுமணன்.

இதையே வேறு சொற்களில் சொல்கிறார் ஷண்முகசுந்தரம். வாக்காளர்களிடம் நம்பகத் தன்மையைப் பெறுவது, தமிழ்நாடு தழுவிய அளவில் ஏற்பைப் பெறுவது எடப்பாடிக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார் அவர்.