வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (16:11 IST)

பண்ட்டை நீக்குவதற்கானக் காரணத்தை அவர் கொடுக்கக் கூடாது – கபில்தேவ் அறிவுரை !

தனக்கு அணியில் இருந்து நீக்கும் வாய்ப்பினை ரிஷப் பண்ட் அணித் தேர்வாளர்களுக்குக் கொடுக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்த ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது விளையாடி வருகிறார். தோனி தனது ஓய்வுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தோனியின் இடத்தைப் பிடிப்பார் என கூறப்பட்ட பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அவர் மேல் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் குரல்களும் எழுந்தன.

இந்நிலையில் அவரது பேட்டிங் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘ பந்து மட்டையில் படும் அந்த இனிய தருணத்துக்காக நாம் காத்திருக்க வேண்டும். பண்ட்டிடம் திறமையும் வயதும் இருக்கிறது. ஏன் அவருக்கு அவசரம் ?. பொறுமை எனும் ஒரு இடத்தில்தான் அவர் வேலை செய்ய வேண்டியுள்ளது. நான் 1984 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் நீக்கப்பட்டேன். ஆனால் அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை நீக்குவதற்கான காரணத்தை நானே ஏற்படுத்திக் கொண்டேன். அதேப்போல பண்ட்டும் அந்தக் காரணத்தைக் கொடுத்துவிட முடியாது. அவரிடம் வெற்றிக்கான பொறி உள்ளது.நாம் அவரை ஆதரிப்போம்.