மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் சதம் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் அரைசதம் ஆகியவற்றின் மூலம் 219 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி கடைசி வரை போராடி 208 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட் செய்துகொண்டிருக்கும் போது திடீரென மைதானத்தை லட்சக்கணக்கான ஈசல்கள் சூழ்ந்தன. இதனால் நடுவர்கள் கேப்டன்களோடு ஆலோசித்து சிறிது நேரம் போட்டியை நிறுத்தினர். மைதானத்தின் விளக்குகள் மங்கச் செய்யப்பட்டன. அதன்பின்னர் ஈசல்கள் செத்து மைதானத்துக்குள் விழ அவற்றை மைதான ஊழியர்கள் அகற்றினர். அதன் பின்னரே போட்டி தொடங்கி நடைபெற்றது.