1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. congo-ebola-virus-outbreak-5678-deaths-who-warning-2026

காங்கோவில் கோரத்தாண்டவம் ஆடும் எபோலா!.. 5,600க்கும் மேற்பட்டோர் பலி!..

காங்கோ
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டில் எபோலா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
 
கடந்த மே 15ஆம் தேதி காங்கோவில் எபோலா தொற்றுப் பரவல் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வைரஸ் பரவத் தொடங்கியது. குறிப்பாக இடூரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
 
உலக சுகாதார அமைப்பு நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 17 நிலவரத்தில் காங்கோவில்  11,613 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5,678 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,148 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
 
இந்தத் தொற்றில் உயிரிழப்பு விகிதம் 48.9 சதவீதமாக உள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட 100 பேரில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சுகாதாரத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கோவில் இதற்கு முன்பு ஏற்பட்ட எபோலா தொற்றுகளைவிட தற்போதைய பாதிப்பு மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. உலக அளவில் 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா தொற்றுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாதிப்பாக இது பதிவாகியுள்ளது.
 
காங்கோவின் எட்டு மாகாணங்களில் உள்ள 68 சுகாதார மண்டலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் மட்டும் 1,417 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் பரவக்கூடியது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
 
இதற்கிடையில், காங்கோவில் நிலவும் ஆயுத மோதல்கள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உள்ளன.
 
எபோலா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவித்துள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
இனி ரத்தத்துக்கு தட்டுப்பாடு இருக்காது! தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் ரத்த தான முகாம்... அரசு அதிரடி அரசாணை!