பாஜக ஏஜெண்டுகளின் பிடியில் அதிமுக? சந்தேகிக்கும் துரைமுருகன்!
தலைமை செயலகம் அதிமுகவின் கட்சி பணிக்காக பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது என திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், நேற்று அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருந்தனர் என தெரிவித்து பகிர் கிளப்பினார்.
அதோடு, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது... ஒரு மசோதாவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது அதிமுக தலைமை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. அதை அதிமுக, தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் மூலம் தெரிவிக்கலாமா?
அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகம் எப்படி அரசியல் மயமாகியுள்ளது என்பதற்கும், அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.
அதிமுகவின் முடிவை ஒரு அரசு துணைச் செயலாளர் எடுக்கிறார் என்றால், அதிமுக, அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? அல்லது மத்திய பாஜக அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினருக்கே உத்தரவிடும் அதிகாரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அந்தத் துணைச் செயலாளருக்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது நேரடியாக மத்திய பாஜக அரசில் இருந்து வந்த நிர்பந்தத்தால் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர், இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் துரைமுருகன் அறிக்கையில் கோரியுள்ளார்.