கூட்டணியில் கோட்டைவிட்ட விஜய்?.. திமுகவை திட்டினால் மட்டும் போதுமா?...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தமிழக அரசியலுக்கு வந்தார். கட்சி துவங்கிய போது விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பேசிய அவர் எங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில்பங்கு கொடுப்போம் என அறிவித்தார்.. தமிழக அரசியலில் இதுவரை அதிமுக, திமுக கட்சிகள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதில்லை. இதன் மூலம் அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணிக்கு செல்லும் கட்சிகள் தவெக பக்கம் வருவார்கள் எனவிஜய் கணக்கு போட்டார். ஆனால் இப்போது வரை தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை..
சில கட்சிகள் முயற்சி செய்தபோதும் விஜய் படி கொடுக்கவில்லை என தெரிகிறது. ஒருபக்கம் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸை தவெக பக்கம் கொண்டு வரும் முயற்சியையும் தவெக செய்தது. 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, சில அமைச்சர் பதவி என தவெக கூறினாலும் திமுகவுடன் செல்வதே நமக்கு நல்லது என காங்கிரஸ் முடிவை எடுத்தது. எனவே தவெகவுக்கு இது ஏமாற்றமாக முடிந்தது..
ஒருபக்கம் தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாருமில்லை. தவெகவில் விஜயை தவிர தெரிந்து முகம் யாரும் இல்லை. ஒரு பக்கம் கூட்டணியும் ஊத்திக் கொண்டதால் விஜயின் திரைக்கவர்ச்சியே மட்டுமே அந்த கட்சி நம்பியிருக்கிறது. விஜய் பொதுக்கூட்டத்தில் பேசுவது மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார். திமுகவை திட்டினால் போதும் வாக்குகள் கிடைத்துவிடும் என அவர் நம்புகிறார்.. அதோடு தான் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் மக்களும், ரசிகர்களும் நமக்கு ஓட்டு போடுவார்கள் என நம்புகிறார்..
விஜய் வரும் பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வருகிறார்கள், அவரை பார்க்க ஆசைப்படுகிறார்கள்.. சமூகவலைத்தளங்களில் விஜய் தொடர்பான செய்திகளுக்கு அதிக லைக்ஸ்களும் வருகிறது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற இது மட்டுமே போதுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற களப்பணி முக்கியம். 50 வருடங்களாக அரசியலை செய்து வரும் திமுகவுக்கும். அதிமுகவுக்கும் அது தெரியும்.. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் பணிகளில் அதிமுக விட திமுக சிறப்பாக செயல்படும். திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களை வீட்டு வாசலுக்கு போய் அழைத்துச் சென்று ஓட்டு போட வைப்பார்கள். இதையெல்லாம் தாண்டி தவெக வாக்குகளை பெற வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை..
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தவெக வந்திருக்கிறது.. ஒருபக்கம் கொள்கைரீதியாக விஜய் எந்த மேடையிலும் எதுவும் பேசுவதில்லை.. தொடர்ந்து திமுகவை மட்டுமே திட்டிக் கொண்டிருக்கிறார்.. அதுவே போதும் எனவும் நினைக்கிறார்.. அது பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.. அதேபோல் திமுகவை தவிர மற்ற கட்சிகளை அவர் விமர்சிப்பதில்லை. அதிமுக, பாஜக, காங்கிரஸ் பற்றி பேசுவதில்லை.. இதனால்தான் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இதையெல்லாம் தாண்டி தேர்தலில் தவெக வெற்றி பெறுமா?.. வாக்குகளை அள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.