முக்கியமான நாட்களில் சட்டப்பேரவையில் உதயநிதி இல்லை.. அதிருப்தியில் திமுக எம்.எல்.ஏக்கள்?
சட்டப்பேரவையில் தற்போது துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் தொடர்ந்து முழுமையாக பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, முக்கியமான விவாதங்கள் நடைபெறும் நாட்களில் அவர் அவையில் இல்லாதது திமுக எம்.எல்.ஏக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் மாலை வரை நீடிக்கிறது. இத்தகைய முக்கியமான நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் முழுமையாக அவையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே உள்ளது.
ஆனால், சில நாட்களில் உதயநிதி அவைக்கு வராமல் இருப்பதாகவும், வந்தாலும் முழு நேரம் அவையில் இல்லாமல் மதியத்திலேயே வெளியேறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த வாரம் அவர் இரண்டு நாட்கள் அவையில் இல்லாதபோது, முதலமைச்சர் விஜய் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக எம்.எல்.ஏக்களுக்கான கார் மற்றும் பல்வேறு துறைகளின் கோப்புகள் தொடர்பான விஷயங்கள் பேசப்பட்டபோது, அதற்கு உடனடி பதில் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவைக்கு வந்த உதயநிதி, அந்த விவகாரங்களுக்கு பதிலளித்த நிலையில் முக்கியமான நேரத்தில் அவையில் இல்லாமல் பின்னர் பதில் சொல்வதால் என்ன பயன்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல், நகராட்சி நிர்வாகத் துறைக்கான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இதுபோன்ற தருணங்களில் ஆளுங்கட்சியின் முடிவுகளை உடனடியாக கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சி தவறவிடக்கூடாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
Edited by Siva

