செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைதாவாரா?
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கணிசமாக உயர்ந்தும், அரசுக்கு வர வேண்டிய வருவாய் மட்டும் குறைந்ததாகப் புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, டாஸ்மாக் ஊழல் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும், அதிகாரத் துஷ்பிரயோகம் நடந்துள்ளதற்கும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய டாஸ்மாக் முறைகேடு வழக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடித் திருப்பம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
