மயில்சாமி, பிரகாஷ்ராஜுக்கு ஒதுக்கப்பட்ட அதே சின்னம்!.. விசில் சின்னத்தின் வரலாறு!...
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெகவுக்கு தேர்தலில் போட்டியிட எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு தவெகவினரிடமும், விஜய் ரசிகர்களிடமும் இருந்தது.
சில நாட்களுக்கு முன்புதான் விசில், கிரிக்கெட் பேட் உள்ளிட்ட 10 சின்னங்களை குறிப்பிட்டு அதில் ஏதேனும் ஒன்றை தங்களை ஒதுக்குமாறு தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், அதில் விசில் சின்னத்தை தவெக தரப்பு விரும்பி கேட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த சின்னமே அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே கோட் படத்தில் வரும் ஒரு பாடலில் விஜய் விசில் போடு என பாடுவார். எனவே இனிமேல், விஜய் ரசிகர்களும் தவெகவினரும் விசில் போட துவங்கி விடுவார்கள். விஜயின் மூலம் விசில் சின்னமும் தமிழகத்தில் பிரபலமாகவும் என கணிக்கப்படுகிறது.
அதே நேரம் விசில் சின்னம் என்பது முதன் முதலாக கொடுக்கப்படும் ஒரு சின்னம் இல்லை. ஏற்கனவே நடிகர் மயில்சாமி சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் சுயேசையாக போட்டியிட்டபோது அவருக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டது. அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ம் வருடம் கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போதும் அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.